என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல…’ – மலேசியா வாசுதேவன் நினைவலைகள்
Monday, February 21, 2011 at 10:17 pm | 152 views
‘என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல…’ – மலேசியா வாசுதேவன் நினைவலைகள்
அந்த ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…’ பாடலை அவர் பாடியிருந்த விதமும், கவியரசரின் வரிகளும் இசைஞானியின் இசையும் அவரை ஒரே இரவில் சிகரத்துக்குக் கொண்டு போய்விட்டன. அதன் பிறகு அவரது இசைப் பயணம் நிற்கவேயில்லை… அவரது உடல் ஒத்துழைத்த வரை.
மலேசியா வாசுதேவன் குரலில் வந்த எந்தப் பாடலை குறிப்பிடுவது எதை விடுவது… அத்தனை பாடல்கள்… அனைத்தும் கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்கள்.
அப்போதெல்லாம் ரஜினி படத்தில் மலேசியா வாசுதேவனுக்கு கட்டாயம் சில பாடல்கள் இருக்கும். ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அந்தப் படத்தின் பாட்டுப் புத்தகத்தை மறக்காமல் வாங்கிவருவோம். அதில் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் எத்தனை என்று முதலில் பார்க்கும் அளவுக்கு அவர் குரல் பிடித்துப் போனது அப்போது. அது என்னமோ… எஸ்பிபி குரலை விட இவரது குரல் ரஜினிக்கு அத்தனை பொருத்தமாக எனக்குத் தெரிந்தது!
காளியில் அடியாடு பூங்கொடியே, தர்மயுத்தத்தில் ஒரு தங்கரதத்தில் மற்றும் ஆகாய கங்கை, முரட்டுக்காளையில் பொதுவாக எம்மனசு தங்கம், எங்கேயோ கேட்ட குரலில் பட்டுவண்ண சேலைக்காரி, அடுத்தவாரிசில் ஆசை நூறுவகை, புதுக்கவிதையில் வாவா வசந்தமே, பாயும் புலியில் பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம், வேலைக்காரனில் பெத்து எடுத்தவதான், எஜமானில் எஜமான் காலடி மண்ணெடுத்து… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மாவீரன், அதிசயப் பிறவி படங்களில் ரஜினிக்கு எல்லா பாடல்களையும் இவர்தான் பாடியிருப்பார். அதிசயப் பிறவியில் வரும் ‘இதழெங்கும் முத்துக்கள் சிந்தட்டும்..’ பாடலின் இசையும் மலேசியா வாசுதேவன் குரலும் தனி கிறக்கத்தைத் தரும். ரஜினியே பாடுவது போலத்தான் இருக்கும் படத்தில் பார்த்தாலும், கண்ணை மூடிக் கொண்டு கேட்டாலும்!
ரஜினிக்கான தெம்மாங்கு, கலாட்டா பாடல்களைப் பாடுவதில் எஸ்பிபிக்கும் இவருக்கும் பெரும் போட்டியே இருக்கும். ரங்காவில் இடம்பெற்ற பட்டுக் கோட்டை நம்மாளு, மிஸ்டர் பாரத்தில் என்னம்மா கண்ணு, நல்லவனுக்கு நல்லவனில் நம்ம மொதலாளி… மறக்கக் கூடிய பாடல்களா அவை!
நெற்றிக்கண்ணில் வரும் தீராத விளையாட்டுப் பிள்ளை பாடலை அவர் பாடியிருக்கும் ஸ்டைல் ரொம்பவே ரசிக்க வைக்கும்.
டிஎம்எஸ்ஸுக்குப் பிறகு, சிவாஜிக்குப் பொருந்திய சரியான குரல் மலேசியா வாசுதேவனுடையதுதான்.
வெள்ளை ரோஜாவில் தேவனின் கோயிலே யாவரும் தீபங்களே… பாடலை வாசுதேவன் பாடியிருந்த விதம், அந்தப் பாடலுக்கே தனி மரியாதை தந்தது. அப்புறம்…முதல் மரியாதை… தமிழ் திரை இசைக்கே மகுடம் சூட்டிய அந்தப் படத்தில் இசைஞானியின் இசையில் மலேசியா வாசுதேவன் தன் பிறவிப் பயனை அடைந்தார் என்றால் மிகையல்ல. அந்த பூங்காற்று திரும்புமா… வுக்கு நிகரான இன்னொரு பாடல்… ம்ஹூம் சான்ஸே இல்லை!
மலேசியா வாசுதேவனின் குரலுக்கு உள்ள தனிச்சிறப்பு… யாராலும் அத்தனை சுலபத்தில் பாட முடியாத சிக்கலான மெட்டுக்களைக் கூட அழகாக பாடிவிடுவதுதான். அந்த versatility தமிழில் ரொம்ப அரிது. இந்தியில் கிஷோர் குமார் மாதிரி என்று சொல்லாம்!
அவரால் அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா (நண்டு) பாடலையும் பாட முடியும், மாமனுக்கு மைலாப்பூருதான் (வேலைக்காரன்) பாடலையும் தர முடியும்.
அமரர் சிதம்பரம் சிஎஸ் ஜெயராமனின் குரலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி பாடுவதிலும் அவர் வல்லவர்.
மணிப்பூர் மாமியார் என்று ஒரு படம். ராஜா இசை. எழுபதுகளின் இறுதியில் இந்தப் படப் பாடல்கள் ஒலிக்காத திருவிழா, கல்யாணம் இருக்காது. அதில் ‘ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே…’, என்ற பாடலுக்கு அப்படியே சிஎஸ் ஜெயராமன் மாதிரி குரல் கொடுத்து அசத்தியிருப்பார்.
பாண்டியராஜனின் முதல் படம் கன்னிராசியில் சுகராகமே… என ஆரம்பிக்கும் பாடலில் முதல் சரணம் வரை சிஎஸ் ஜெயராமன் குரலில் பாடி பரவசப்படுத்தியிருப்பார் வாசுதேவன்.
அடுத்தாத்து ஆல்பட் என்று ஒரு படம். இதிலும் மலேசியா வாசுதேவன் சிஎஸ் ஜெயராமன் குரலை நகலெடுத்திருப்பார், சொந்தங்களே சுற்றங்களே சோகம் என்ன சொல்லுங்களே… என்ற பாடலில். கேட்டு முடிக்கும்போது, விழியோரங்கள் துளிர்க்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!
காதல் பாடல்களில் மலேசியா வாசுதேவனின் குரல் கிறங்கடிக்கும். தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளியில் சொக்கியவர்களுக்கு அது புரியும்.
அந்த ஏழு நாட்களில் வரும் ‘எண்ணியிருந்தது ஈடேற..’ ரொம்ப நாள் எனது விருப்பப் பாடல். விடியும் வரை காத்திரு படத்தில் நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு, இன்னொரு முதல் தரப் பாடல்.
கல்லுக்குள் ஈரம் படத்தில் கொத்தமல்லிப் பூவே என்ற பாடலில், ஆத்தோரம் சின்னக்குட்டி என்று ஆரம்பிக்கு அந்த வரிகளை அத்தனை அலட்சியம், கிராமத்துத் திமிர்த்தனம், கொப்பளிக்கும் காமம் என எல்லாம் கலந்து பாடியிருப்பார் மனிதர்.
ஆண்பாவத்தில் குயிலே குயிலே.., மனைவி சொல்லே மந்திரம் படத்தில் மானே மாங்குயிலே, அச்சமில்லை அச்சமில்லையில் ஓடுகிற தண்ணியிலே, நான் போட்ட சவாலில் சுகம் சுகமே…, கிராமத்து அத்தியாயத்தில் ஆத்து மேட்டுல, சிகப்பு ரோஜாக்களில் இந்த மின்மினிக்கு…., மண்வாசனையில் ஆனந்தத் தேன்சிந்தும் பூஞ்சோலையில், சின்னவீடு படத்தில் வெள்ளமனம் உள்ள மச்சான்…, நிறம் மாறாத பூக்களில் ஆயிரம் மலர்களே…, சகலகலா வல்லவனில் நிலாகாயுது… விட்டால் அவர் பாடிய பெரும்பாலான பாடல்களை இங்கே குறிப்பிட்டுக் கொண்டே போக வேண்டி வரும்!
காதல் சோகப் பாடலுக்கு பொன்மானைத் தேடி… ஒரு எவர்கிரீன் பாட்டு. தெம்மாங்குப் பாடல்களைப் பாடுவகில் இவர்தான் நம்பர் ஒன். எங்க ஊர் ராசாத்தியில் சிறுக்கி ஒருத்தி சிங்காரக் குறத்தி என்ற பாடலை அவர் அத்தனை வேகமாக, விறுவிறுப்பாகப் பாடியிருப்பார். ரஜினியின் பெரும்பாலான தெம்மாங்குப் பாடல்களை வாசுதேவன்தான் பாடியிருப்பார். படிக்காதவனில் வரும் சொல்லி அடிப்பேனடி, மாப்பிள்ளையில் என்னோட ராசி நல்ல ராசி, மாவீரனில் ஒதுங்கு ஒதுங்கு… எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்!
ஆயிரம் புதிய பாடகர்கள் வந்தாலும், விதம் விதமாகப் பாடி அசத்தினாலும், வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே கேட்டு லயித்த இதுபோன்றதொரு பாடகர் இனி இல்லை எனும் போது மனம் கனத்துப் போகிறது.
நடிகராக வேண்டும் என்றுதான் மலேசியாவிலிருந்து வந்தாராம் வாசுதேவன். அந்த ஆசை அவர் ஐம்பதுகளைத் தொட்டபோதுதான் நிறைவேறியது. அந்த வாய்ப்பையும் தந்தது பாரதிராஜாதான். ஒரு கைதியின் டைரி படத்தில். அதன்பிறகு பல படங்களில் வெகு சிறப்பான வில்லத்தனத்தையும் குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார் வாசுதேவன்.
இவர் இசையமைத்தது 4 படங்கள். அவற்றில் சாமந்திப்பூதான் பெஸ்ட். இப்போதும் ரசிக்க வைக்கிற இசை, பாடல்கள். ஆகாயம் பூமி என்றும் ஒன்றா… ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்!
ஒரு செய்தியாளராக ஒரே ஒரு முறை தினமணிக் கதிருக்காக அவரைச் சந்தித்திருக்கிறேன். மிக எளிமையான மனிதர். நிதானம் தவறாத பதில் அவர் தந்தவை.
பொதுவாக ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவரது நினைவுகளைச் சொல்லி அழுவார்கள். ஆனால் கலைஞர்கள் மறையும்போது மட்டும், அவர்களின் படைப்புகளை திரும்பத் திரும்ப கேட்டு மனம் பரவசப்படுகிறது. அந்த வகையில் மரணத்திலும் கூட சோகத்தைத் தராத மகத்துவம் கலைஞர்களுக்கு மட்டும்… மலேசியா வாசுதேவன் மரணம் என்ற செய்தி வந்ததிலிருந்து அவரது ஒரு நூறு பாடல்களை மீளக் கேட்டிருப்பேன்.
கலைஞர்கள் மரணத்தை வென்றவர்கள்!
மலேசியா வாசுதேவன் நினைவுகளுக்காக…
No comments:
Post a Comment